வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு அரசியல்வாதிகளின் வாழ்த்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நாடு முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பாடப்போவது சச்சின் டெண்டுல்கரின் புகழே. அதில் தவறேதும் இல்லை.மனிதர் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்தால் எப்படி? நாம் சச்சினுக்கு வாழ்த்து சொல்வதை விட பிரபலங்களின் வாழ்த்துக்களை கேட்டேன்.(கற்பனையில் தான்).


மு.கருணாநிதி: அருமைத் தம்பி சச்சின்! உன் சாதனையை நினைத்து உளம் மகிழ்ந்தேன். நானும் இள வயதில் கிரிக்கெட் விளையடியாவன்தான். சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முறை மறைந்த டான் பிராட்மன் உடன் அளவளாவி இருந்த பொழுது அவருக்கு பின் நீதான் பல சாதனைகள் புரிவாய் என்று கணித்தவனே இந்த கருணாநிதி தான்.வேண்டுமானால் அவரிடமே அதை கேட்கலாம்.நானும் ஒரு கிரிக்கெட் அறிஞர் என்ற முறையில் உனக்கு வாழ்த்து சொல்வதில் ஒப்பற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சச்சினின் சாதனைகளை பாராட்டி, தமிழ் திரையுலகின் சார்பில், நேரு உள் விளையாட்டு அரங்கில், அடுத்த மாதம் ஒரு பிரும்மாண்ட பாராட்டு விழாவிற்கு நானே தலைமை தாங்கி நடத்தி வைப்பேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். இந்த விழாவை கலைஞர்
தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து மகிழடா உடன்பிறப்பே!

ஜெயலலிதா:
சச்சின் 200 ரன்களை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்ட கேப்டன் தோனியை வன்மையாக கண்டிக்கிறேன். கருணாநிதியின் சதியே இதற்கு காரணம்.எனினும், அதையும் மீறி சாதனை படைத்த சச்சின், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். என்ற கீதை மொழியை நிரூபித்துள்ளார். தமிழகத்தில் அது எப்போது நடக்கும் என உலகத் தமிழர்கள் தினந்தோறும் என்னிடம் கேட்கிறார்கள். விரைவில் என் தலைமையில் ஆட்சி நடக்கும் போது அது நிறைவேறும் என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன். தோனியை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை ஏற்று நடத்துவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: டெண்டுல்கரின் சாதனையை பாராட்டும் இந்த வேளையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வன்னியர் கூட இல்லை என்பது கண்டனத்துக்குரியது. இதற்கு வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம். அன்புமணி ராமதாசை விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும். முதல் கட்டமாக பெண்ணாகரத்தில் பா.ம.க வெற்றி பெற்றால் அனைத்தும் சரியாகிவிடும்.

வை.கோ.:
17 ம் நூற்றாண்டிலே, இங்கிலாந்தை ஆண்டுகொண்டிருந்த பௌலரோ கீப்பர் என்ற மன்னரின் ஆணைப்படி உருவாக்கப் பட்ட இந்த கிரிக்கெட் போட்டியிலே, முடி சூடா மன்னனாக விளங்குகிறார் டெண்டுல்கர் என்பதை இந்த பிரும்மாண்ட பத்திரிகையாளர் கூட்டத்திலே, உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள நான் கடமை பட்டுளேன்.இந்த சாதனையை விளக்கி இந்தியாவிலிருந்து இங்கிலாந்த் வரை ஒரு சாதனை நடைப்பயணம் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன்

கே.வி. தங்கபாலு:
டெண்டுல்கரின் சாதனை தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதுதான் எங்களது கருத்து. அன்னை சோனியா காந்தி ஆணையிட்டால், உடனடியாக டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவிப்போம்.

விஜயகாந்த்:
டெண்டுல்கர் 200 ரன் அடிக்க தினேஷ் கார்த்தியோடும்,தோனியோடும் கூட்டணி தேவைப்பட்டது.அவரால தனிய நின்னு ஒரு 100 ரன் அடிக்க முடியுமா? வேணும்னா கடவுளோடும்,மக்களோடும் கூட்டணி வைச்சுக்கலாம்.இந்த சவாலுக்கு அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க!

சீமான்:
தினேஷ் கார்த்திக் என்கிற தமிழன் அடிச்ச 79 ரன்களை பாராட்டாமல், டெண்டுல்கர் என்கிற வடநாட்டவரை பாராட்டறீங்கன்னா, தமிழ் உணர்வு செத்துப்போச்சுன்னு தானே அர்த்தம். யார் யார் எல்லாம் டெண்டுல்கரை வாழ்த்துரீங்களோ, அவங்க வீட்டு முன்னாடி ஒரு பெரிய போராட்டம் நடத்தப்போறோம்.


சுப்பிரமணியன் சுவாமி:
இந்த மேட்சே உண்மையான மேட்ச் இல்லை.டெண்டுல்கருக்கும் ஸ்மித்துக்கும் இடையில் தொடர்பு இருக்கு.சச்சினுக்கு சவுத் ஆப்ரிக்கால தங்கச் சுரங்கம் சொந்தமா இருக்கு. அவாள்லாம் சேர்ந்து இவாளை ஏம்மாத்திண்டு இருக்கா ! இந்த மேட்ச் fixing சம்பந்தமா எல்லா விவரமும் என்கிட்டே இருக்கு.கூடிய விரைவில் இது சம்பந்தமா நான் உங்களுக்கெல்லாம் தெரியப் படுத்திறேன்.பின் குறிப்பு:
ip address கண்டுபிடித்து ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு, நான் தமிழ்நாட்டிலேயே இல்லை.குறைந்த பட்சம் ஒரு ஹெலிகாப்ட்டர் அனுப்பவும்.