வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கிரிக்கெட்-ஒரு தொடர்பதிவு.


இந்த தொடர் பதிவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை,இருந்தாலும் பொழுது போகாமல் இருப்பதிற்கு ஏதாவது செய்யலாமே என்று ஒரு எண்ணம்.ஆரம்பித்தவர்களுக்கு நன்றி. http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_25.html


சச்சின் - தொடர்பதிவு

1. பிடித்த கிரிக்கெட் வீரர்

சச்சின்,ஷேன் வார்ன்,கபில்.(இன்னும் நீளும்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், அசாருதீன்,ஜடேஜா.(முதலாமவர் நடத்தையால், மற்ற இருவர் மேட்ச் fixing )

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்

மெக்ராத்,வாசிம் அக்ரம்,ஆம்ப்ரூஸ்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்

அக்தர்

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்

ஷேன் வார்னே, ஹர்பஜன்,சக்லைன்,

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்

முரளி.

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்

சச்சின், லக்ஸ்மன்.

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்

தோனி

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்

கில்க்ரிஸ்ட், கங்குலி,கிர்ஸ்டன்,யுவராஜ்.

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்

nil (இடது கை batsman அனைவரும் அழகுதான்)

11. பிடித்த களத்தடுப்பாளர்

ஜான்டி ரோட்ஸ், பாண்டிங்(டைரக்ட் ஹிட் specialist )ரெய்னா.

12. பிடிக்காத களத்தடுப்பாளர்

நெஹ்ரா,முனாப் படேல்,கங்குலி.

13. பிடித்த ஆல்ரவுண்டர்

கபில்தேவ், குளூஸ்னர்,காலிஸ்,

14. பிடித்த நடுவர்

சைமன் டோபல் ,பில்லி பௌடன்,வெங்கட்ராகவன்.

15. பிடிக்காத நடுவர் ஒரு இந்திய அம்பயர் ஜடேஜாவிற்கு அவுட் கொடுத்துவிட்டு நைசாக தலையை சொறிவது போல் சொறிந்தார்.(ஸ்ரீ லங்காவுடன் என்று நினைவு) பெயர் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

16 பிடித்த நேர்முக வர்ணனையாளர்

ரவி சாஸ்திரி,டோனி கிரேக்,
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

அருண் லால்.

18. பிடித்த அணி

இந்தியா

19. பிடிக்காத அணி

எதுவும் இல்லை.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி

இந்தியா-ஆஸ்ட்ரேலியா.

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி

எதுவுமில்லை.

22. பிடித்த அணி தலைவர்

கங்குலி,மார்க் டைலர்.

23. பிடிக்காத அணித்தலைவர்

பாண்டிங்.

24. பிடித்த போட்டி வகை

டெஸ்ட் போட்டி.
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி

சச்சின் – சேவாக், கில்க்ரிஸ்ட் - ஹைடன் ,ஜெயசூர்யா - கலுவிதரானா.
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி

பிரபாகர்-சித்து.

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்

பிராட்மன்,சச்சின்,லாரா.

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் பிராட்மன்,சச்சின்,லாரா,கபில்தேவ்,ஷேன் வார்னே,மெக்ராத்,வாசிம் அக்ரம்.....................................
இங்கிருந்து யாராவது தொடர நினைத்தால் தொடரலாம்.எனக்கு தெரியப்படுத்தவும்.

சச்சின் டெண்டுல்கருக்கு அரசியல்வாதிகளின் வாழ்த்து


நாடு முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பாடப்போவது சச்சின் டெண்டுல்கரின் புகழே. அதில் தவறேதும் இல்லை.மனிதர் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்தால் எப்படி? நாம் சச்சினுக்கு வாழ்த்து சொல்வதை விட பிரபலங்களின் வாழ்த்துக்களை கேட்டேன்.(கற்பனையில் தான்).


மு.கருணாநிதி: அருமைத் தம்பி சச்சின்! உன் சாதனையை நினைத்து உளம் மகிழ்ந்தேன். நானும் இள வயதில் கிரிக்கெட் விளையடியாவன்தான். சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முறை மறைந்த டான் பிராட்மன் உடன் அளவளாவி இருந்த பொழுது அவருக்கு பின் நீதான் பல சாதனைகள் புரிவாய் என்று கணித்தவனே இந்த கருணாநிதி தான்.வேண்டுமானால் அவரிடமே அதை கேட்கலாம்.நானும் ஒரு கிரிக்கெட் அறிஞர் என்ற முறையில் உனக்கு வாழ்த்து சொல்வதில் ஒப்பற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சச்சினின் சாதனைகளை பாராட்டி, தமிழ் திரையுலகின் சார்பில், நேரு உள் விளையாட்டு அரங்கில், அடுத்த மாதம் ஒரு பிரும்மாண்ட பாராட்டு விழாவிற்கு நானே தலைமை தாங்கி நடத்தி வைப்பேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். இந்த விழாவை கலைஞர்
தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து மகிழடா உடன்பிறப்பே!

ஜெயலலிதா:
சச்சின் 200 ரன்களை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்ட கேப்டன் தோனியை வன்மையாக கண்டிக்கிறேன். கருணாநிதியின் சதியே இதற்கு காரணம்.எனினும், அதையும் மீறி சாதனை படைத்த சச்சின், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். என்ற கீதை மொழியை நிரூபித்துள்ளார். தமிழகத்தில் அது எப்போது நடக்கும் என உலகத் தமிழர்கள் தினந்தோறும் என்னிடம் கேட்கிறார்கள். விரைவில் என் தலைமையில் ஆட்சி நடக்கும் போது அது நிறைவேறும் என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன். தோனியை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை ஏற்று நடத்துவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: டெண்டுல்கரின் சாதனையை பாராட்டும் இந்த வேளையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வன்னியர் கூட இல்லை என்பது கண்டனத்துக்குரியது. இதற்கு வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம். அன்புமணி ராமதாசை விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும். முதல் கட்டமாக பெண்ணாகரத்தில் பா.ம.க வெற்றி பெற்றால் அனைத்தும் சரியாகிவிடும்.

வை.கோ.:
17 ம் நூற்றாண்டிலே, இங்கிலாந்தை ஆண்டுகொண்டிருந்த பௌலரோ கீப்பர் என்ற மன்னரின் ஆணைப்படி உருவாக்கப் பட்ட இந்த கிரிக்கெட் போட்டியிலே, முடி சூடா மன்னனாக விளங்குகிறார் டெண்டுல்கர் என்பதை இந்த பிரும்மாண்ட பத்திரிகையாளர் கூட்டத்திலே, உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள நான் கடமை பட்டுளேன்.இந்த சாதனையை விளக்கி இந்தியாவிலிருந்து இங்கிலாந்த் வரை ஒரு சாதனை நடைப்பயணம் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன்

கே.வி. தங்கபாலு:
டெண்டுல்கரின் சாதனை தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதுதான் எங்களது கருத்து. அன்னை சோனியா காந்தி ஆணையிட்டால், உடனடியாக டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவிப்போம்.

விஜயகாந்த்:
டெண்டுல்கர் 200 ரன் அடிக்க தினேஷ் கார்த்தியோடும்,தோனியோடும் கூட்டணி தேவைப்பட்டது.அவரால தனிய நின்னு ஒரு 100 ரன் அடிக்க முடியுமா? வேணும்னா கடவுளோடும்,மக்களோடும் கூட்டணி வைச்சுக்கலாம்.இந்த சவாலுக்கு அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க!

சீமான்:
தினேஷ் கார்த்திக் என்கிற தமிழன் அடிச்ச 79 ரன்களை பாராட்டாமல், டெண்டுல்கர் என்கிற வடநாட்டவரை பாராட்டறீங்கன்னா, தமிழ் உணர்வு செத்துப்போச்சுன்னு தானே அர்த்தம். யார் யார் எல்லாம் டெண்டுல்கரை வாழ்த்துரீங்களோ, அவங்க வீட்டு முன்னாடி ஒரு பெரிய போராட்டம் நடத்தப்போறோம்.


சுப்பிரமணியன் சுவாமி:
இந்த மேட்சே உண்மையான மேட்ச் இல்லை.டெண்டுல்கருக்கும் ஸ்மித்துக்கும் இடையில் தொடர்பு இருக்கு.சச்சினுக்கு சவுத் ஆப்ரிக்கால தங்கச் சுரங்கம் சொந்தமா இருக்கு. அவாள்லாம் சேர்ந்து இவாளை ஏம்மாத்திண்டு இருக்கா ! இந்த மேட்ச் fixing சம்பந்தமா எல்லா விவரமும் என்கிட்டே இருக்கு.கூடிய விரைவில் இது சம்பந்தமா நான் உங்களுக்கெல்லாம் தெரியப் படுத்திறேன்.



பின் குறிப்பு:
ip address கண்டுபிடித்து ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு, நான் தமிழ்நாட்டிலேயே இல்லை.குறைந்த பட்சம் ஒரு ஹெலிகாப்ட்டர் அனுப்பவும்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஜால்ரா கவிஞர் ஜாலி


நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இரவு ஒரு அம்மா விசுவாசி நண்பருடன் டாஸ்மாக்கில் இருந்த பொழுது, மனிதர் புலம்பிக்கொண்டிருந்தார்.


"அம்மா மட்டும் இப்போ சி. எம்மா இருந்தாங்கன்னா இப்படியா இருக்கும், எவ்வளவு பேர் வாழ்த்து சொல்லிருப்பாங்க! பாராட்டியிருப்பாங்க! எல்லாம் நேரம்! அடுத்த வருஷம் பார்!" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.


நான் இரவெல்லாம் இதே நினைவாக மப்பில் இருந்த போது,எதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், இப்பொழுதே கற்பனையில் இறங்கினால் என்ன? என்று தோன்றியது. அணுகினேன் ஜால்ரா கவிஞர் ஜாலி யை. சி.எம் அம்மாவுக்காக அவர் எழுதிய கவிதை இதோ! (கவிதை!கவிதை! படி.................?)


முன் குறிப்பு:

இந்த கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. படித்து விட்டு சிரித்து விட்டுபோகவும்



போயஸ் தோட்டத்து அம்மா - நீதான்

கும்தலக்கடி கும்மா- மற்றவரெல்லாம்

வுட்டாலக்கடி சும்மா!

கொடுத்து கொடுத்து சிவந்தது உன் கரம்.

அதனால் உனக்குத் தானே பெண்ணா கரம்?


சமூக நீதி காத்த வீராங்கனையே,

உன் அறிக்கை ஒவ்வொன்றும் ஏவு கணையே!

உயிரோடு இருந்திருந்தால் உன்னை

உச்சி மோர்ந்திருப்பார் பெரியார்.

உன்னால் தானே தமிழருக்கு கிடைக்க விருக்கிறது

முல்லைப் பெரியாறு!


தமிழர் வாழ்வில் ஏற்றி வைத்தாய் ஒளி

அதுதானே அவர்தம் வாழ்வுக்கான வழி?

உலகிற்கே நீதான் விழி!

இது தெரியாமல் பிதுங்குகிறது, உன்

எதிரிகளின் முழி!

பலர் போட்டார்கள் உன் மேல் பழி, நீ

எடுத்து வீசினாய் நீதி என்னும் கழி!

திரும்பவும் உனக்கு மகுடம்,

ஏனென்றால் அதுதான் உன் சுழி! உன்

எதிரி கூடாரம் ஆகிவிட்டது காலி. ஏனென்றால்

உனைப் புகழும் நான்

ஜால்ரா கவிஞன் ஜாலி!


பாரதி கண்ட புதுமைப் பெண்ணே, உன்னைப்

போற்றுகிறது இந்த பாரத மண்ணே! உன்

பெயர்தான் இனி எங்களுக்கு நாட்டுப் பண்ணே!


ஆண்டின் முதல் மாதம் ஜனவரி, நீதான்

தமிழ் நாட்டின் முகவரி. இதற்கு

முன்பிருந்தது ஒரு சர்வாதிகாரி.


தமிழகத்தின் கைவிளக்கேந்திய காரிகையே,

உன்னிடம் வைக்கிறோம் ஒரு கோரிக்கையே

அறிவித்து விடு இந்த நாளை

தமிழ் புத்தாண்டாய் ! மாறட்டும்

அது ஆண்டாண்டாய்!


இப்படிக்கு,

எல்லா முதல்வருக்கும்

ஜால்ரா அடிக்கும்

ஜால்ரா கவிஞர் ஜாலி !


(பெரியவர் மன்னிக்க.......................)

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வாழ்த்துக்கள் சாரு


பின் நவீனத்துவ தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க,சொல்லப்போனால் முதன்மையான எழுத்தாளர் சாருநிவேதிதா. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்களில் அவருக்கு எப்பொழுதுமே இடம் உண்டு. சொல்லப்போனால் அவர் என் குரு. எனக்கு மட்டுமல்ல. தமிழில் எழுதத் துவங்கும் எவருக்குமே அவர் மிகச்சிறந்த முன்னோடி. அதுவும் நாம் சுஜாதா வை இழந்து விட்ட இந்த தருணத்தில்.
அவர் எனக்கு முதலில் அறிமுகமானது இணையம் வழியாகத்தான்.என் நண்பர் ஒருவர் மிக்க படித்தவர்.பண்பாளர். வீட்டினுள் மிகப்பெரிய நூலகம் வைத்திருப்பவர்.சைவ மத வழி வந்தவராவர். அவர் தான் எனக்கு சாருவின் இணைய தளத்தை அறிமுகப்படித்தினார். அதற்காக நான் என்றென்றும் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

சாருவின் புத்தகங்களை எங்கே வாங்குவது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது, அவர் தான் உயிர்மையில் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கினார். அடுத்த நாள் அந்த புத்தகத்தை என்னிடம் தந்து, லட்சியம் இல்லாத எழுத்துக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல்தான். தயவு செய்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த லட்சியம் இல்லாத எழுத்தை நான் படித்ததின் விளைவுதான் நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த நாவலை முதலில் நான் படித்தது அதில் இருந்த பாலியல் வார்த்தைகளுக்காகத்தான்.(வயசு அப்படி!) பின்பு அதை படிக்க படிக்க சொல்லொனாத் துயரம் ஏற்பட்டது. பின்பு அதை மறுபடி மறுபடி வாசித்தேன். இன்று வரை அதை எப்பொழுது படித்தாலும் இனம் புரியாத உணர்வே ஏற்படுகிறது.

சரி. இப்பொழுது அதற்கு என்ன? ஒன்றுமில்லை. சாருவின் அந்த நாவல் ஜீரோ டிகிரி. அது இப்பொழுது கலிபோர்னியா ஸ்டேட் யுனிவெர்சிட்டி யில் Comparative World Literature என்ற பிரிவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. http://www.calstate.edu/ இது பற்றி தெரிவித்திருப்பவர் சாரு தான். எவ்வளவு அவமானகரமான விஷயம் இது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய இந்த கௌரவத்தை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் இன்று தமிழ் சமூகம் உள்ளது. http://www.charuonline.com/Feb2010/narseythi.html

இது ஏதோ விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது போன்ற செய்தி அன்று. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்குமே கிடைத்த கௌரவமாக இதை கருத வேண்டும்.

நம் தமிழ் நாட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவமே கிடைக்காது. விஜய் போன்றவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இது எல்லாம் நன்றாக தெரிந்தவர்தான் சாரு. இருந்தும் தமிழில் விடாமல் எழுதுகிறார்.

அந்த பதிவின் கடைசியில் ஒரு நல்ல விஷயம் கூறியுள்ளார். அதை அப்படியே பிடித்து எங்காவது சென்று விடுங்கள் சாரு!ரஹ்மான் மாதிரி. நாங்கள் எட்டி நின்று பார்க்கிறோம். வழக்கம் போல் கருணாநிதி யை பாராட்டி விட்டு, வேட்டைக்காரன் படத்தை ப்ளாக்கில் பார்த்து, குமுதத்தில் மூழ்கி கிடப்போம். வாழ்த்துக்கள் சாரு.

சனி, 20 பிப்ரவரி, 2010

தண்டச்சோறு

முன் குறிப்பு:
இந்த கவிதை(?) என் பத்தொன்பதாவது ஆவது வயதில் எழுதப்பட்டது.

மொட்டை வெய்யில் அலைச்சல்
எழுதி குவித்த நூறு அப்ளிகேசன்கள்
பதில் சொல்லி அலுத்த ஆயிரம் இன்டர்வ்யூ கேள்விகள்
தோல்விகளையெல்லாம் வெற்றியின்
படிக்கற்களாக மாற்றிட நினைத்தாலும்
ஒவ்வொரு முறையும் கூசித்தான் போகிறேன்
"இன்னும் கொஞ்சம் சாதம் போடுமா!" எனும் பொழுது.

பின் குறிப்பு:
இந்த கவிதை(மறுபடியும்...........?) ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது.பிரசுரம் ஆனதா என்று தெரியவில்லை.ஏனென்றால் அப்பொழுது எனக்கு அட்ரஸே இல்லை.பிரசுரம் ஆகியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அஜீத்தின் அட்டகாசம்


சமீபத்தில் கருணாநிதிக்கு திரையுலகின் சார்பில் மேலும் ஒரு பாராட்டு விழா நடந்தது.(இதற்கு ஏதாவது கின்னஸ் ரெகார்ட் இருக்குதா? இருந்தால், நம்மாள்தான் ரெகார்ட் ஹோல்டர்).

இதில் ஒன்றும் விசேஷசெய்தி இல்லை. அதில் அஜீத் பேசியதுதான் விசேஷம்.பொதுவாகவே அவர் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வதை தவிர்ப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அப்படியே கலந்து கொண்டாலும் அபூர்வமாகத்தான் மைக் பிடிப்பார்.

இந்த முறை வெளுத்து வாங்கிவிட்டார்.திரையுலகில் நிலவி வரும் ஒரு விரும்பத்தகாத போக்கு எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம்,மனிதசங்கிலி,மறியல்,ஊர்வலம் நடத்துவது.காவிரியில் தண்ணீர் தரவில்லையா?நடத்து ஒரு அடையாள உண்ணாவிரதத்தை.

உண்ணாவிரதம் என்றால் காந்தி இருந்த உண்ணாவிரதம் என்றா நினைக்கிறீர்கள்? அட அசடுகளே? காலையில் வயிறு நிறைய சாப்பிட வேண்டியது.பின்பு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து உட்காரவேண்டியது.மைக் கிடைத்தவுடன் கர்நாடக காரனையோ,இல்லை கேரளா காரனையோ அடிப்பேன் உதைப்பேன் என்று சகட்டு மேனிக்கு வீராவேசம் பேசுவது.பக்கத்தில் இருக்கும் நடிகைகளிடம் சிறிது நேரம் கடலை போட்டுக்கொண்டிருந்தால், மாலை ஆகிவிடும். உடனே பழரசம் வந்துவிடும்.குடித்து விட்டு தமிழ்வாழ்க என்று முழங்கிவிட்டு, வீட்டிற்கு போய் பிரியாணியை ஒரு பிடி பிடிப்பது.இது தான் உண்ணாவிரதம்.

இந்த உண்ணாவிரதத்தை கலைஞர் டிவி யில் லைவ் ஆக பார்த்து நாம் மகிழலாம்.
ஆனால்,உடனே காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடும் என்று யாராவது எதிர்பார்த்தால் அதற்கு நடிகர்கள் பொறுப்பாளி ஆக முடியாது.அவர்கள் வேலை அந்த அரை நாள் உண்ணாவிரதம் மற்றும் மாநில வெறியை தூண்டும் பேச்சுக்கள் மட்டுமே.

அதற்கு அடுத்த வாரமோ அடுதத மாதமோ அவர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் அவர்களுக்கு நல்லுணர்வு ஏற்பட்டு சக மாநிலத்தவர்களோடு சமாதானமாக போய் விடுவார்கள்.பின்னே காசு பார்க்க வேண்டாமா?பின் எதற்காக இந்த உண்ணாவிரத நாடகமெல்லாம்?

அஜீத் இதை போட்டு உடைத்துவிட்டார்.ஒரு சிலரின் வற்புறுத்தல் மற்றும் பயம் காட்டுதலே இதற்கு காரணம்.கருணாநிதி யின் ஆசி பெற்ற ஒரு சிலர்,அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தொல்லையை திரையுலகின் மீது திணித்து வந்துள்ளார்கள்.

இது ஒரு விரும்பத்தகாத போக்கு.ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அது அவர்களின் உரிமையும் கூட. ஏன் அவர்களுக்கு என்று எந்த ஒரு கருத்தும் இருக்காதா?அதே போல்தான் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு முதல்வருக்கு ஜால்ரா தட்டுவது அவரவர் விருப்பம்.

இதை அஜீத் முதல்வர் முன்பாகவே பட்டவர்த்தனமாக பேசியிருப்பது, அவருடைய துணிச்சலை காட்டுகிறது.அந்த பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டிய ரஜினிக்கும் நமது பாராட்டுக்கள்.(தலைவா!நீங்க பேசியிருக்கனும்).

பூனைக்கு மணி கட்டியாச்சு.பார்ப்போம்.
அனைவருக்கும் வணக்கம்.நாட்டில் பொழுது போகாமல் கணிணியை வெறுத்து பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட படியாலும்,எனக்கும் வேறு வேலை இல்லாத காரணத்தாலும், இந்த வலைப்பூவை ஆரம்பித்தே தீர வேண்டும் என்று ஒசாமா....... மன்னிக்கவும்...ஒபாமா(அவர் எங்கள் குடும்ப நண்பர்)........கேட்டுக்கொண்டதாலும்,(நேற்று இரவுதான் தமிழ் படம் பார்த்தேன்..அந்த ஹேங்ஓவர்....... விமர்சனம் விரைவில்) இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.நம் தமிழ் நாட்டில் எதை செய்தாலும் யாருக்காவது டேடிகட் செய்தே தீர வேண்டும் என்பது பாரம்பரியம்.நான் இந்த வலைப்பூவை என்ஒன்று விட்ட சித்தப்பாவின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகளின் முதல் குழந்தைக்கு டேடிகட் செய்கிறேன். இனி வேட்டை ஆஆஆஆஆஆஆஆஆஅரம்பம்.