வியாழன், 11 மார்ச், 2010

எக்ஸ்போசரும் பேன்சி கோவணமும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நித்யானந்தர் யாருக்கு நன்மை புரிந்தாரோ இல்லையோ?நிச்சயமாக மீடியாக்களுக்கு சரியான வசூல் என்பதில் சந்தேகமில்லை.அதிலும் சன் டிவி யும்,நக்கீரனும் சிறப்பாக கல்லா கட்டிவிட்டதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்ததால்,இதை யாரும் பெரிதாக பேசவில்லை.இந்த நிலையில் நாம் பெரிதாக கவலைப் பட்டிருந்தது, சாரு வைப் பற்றிதான்.இந்த விவகாரத்தில் அவரை தேவையில்லாமல் உள்ளே இழுத்து நாறடித்துவிடுவார்களே, என்று தான் மிகவும் கவலைப்பட்டோம்.இதனால் அவருடைய எழுத்து தடை பட கூடாது என்பதே நம் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால் மனிதர் விட்டார் பாருங்கள் ஒரு அறிவிப்பு!நாமே சற்று ஆடித்தான் போய்விட்டோம்!நித்யானந்தர் பற்றிய புதிய தொடர் ஒன்றை சாரு எழுதப் போகிறார்! இம்முறை இணையத்தில் அல்ல!குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில்.பின்னே இதையும் காசு கொடுக்காமல் ஓசியில் படிக்கலாம் என்றா நினைக்கிறீர்கள்?நடக்காது.நித்யானந்தர் பெயரைப் போட்டு எந்த கழுதை எழுதினாலும் நன்றாக கல்லா கட்டும் இந்த நேரத்தில், குமுதம் ரிப்போர்டர் சரியான ஆளைப் பிடித்துவிட்டது.கண்டிப்பாக இருவருமே காசு பார்த்துவிடுவார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் நம்மைப் போன்ற நீண்ட நாள் சாரு வாசகர்களுக்கு இது சிறிது வருத்தமே ஏற்படுகிறது.அவர் குமுதத்தில் எழுதுவதால் அல்ல.தாராளமாக எழுதட்டும்.அவருடைய எழுத்து வெகு ஜனப் பத்திரிகைகளில் அடிக்கடி வர வேண்டும், என்பதே நம் விருப்பம்.ஆனால் அது நித்யானந்தரை குறித்து என்று என்னும்பொழுதுதான் சற்று வருத்தமாக உள்ளது.சாரு விடம் எழுதுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.இன்னும் அவரிடமிருந்து நவீன உலக இலக்கியங்களை இங்குள்ள எழுத்தாளர்களே அறிந்து கொண்டிருக்க வில்லை.அதை முழுவதும் எழுதி முடிக்கவே அவர் ஆயுள் போதாது என்று அவரே கூறியிருக்கிறார்.இந்நிலையில் அவர் நூறு பேர் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஒரு புலனாய்வு(?) பத்திரிகையில் எழுதப் போகிறார் என்றால்...........மன்னியுங்கள் சாரு. நாங்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.தங்கள் நேரத்தை இந்த குப்பைகளில் ஏன் செலவு செய்கிறீர்கள்?எவ்வளவு பேர் உங்கள் எழுத்தை படிக்கிறார்கள் என்பதில்லை.என்ன படிக்கிறார்கள்? என்பதே முக்கியம்.இதுவும் அவர் சொன்னதுதான்.

ஏற்கனவே அவரை சிலர் கிசு கிசு எழுத்தாளர் என்று நாக்கில் நரம்பில்லாமல் விமர்சிக்கிறார்கள்.இந்நிலையில் இது வேறு இப்பொழுது?சரி.எதுவும் நம் கையில் இல்லை.நடப்பது நடக்கட்டும்.


பின் குறிப்பு:
சாருவின் நித்யானந்தர் குறித்த பேட்டி, இன்று மாலை பதிவேற்றம் செய்யப்படும்.(அவர் நமக்கு பேட்டி கொடுக்கப் போகிறாரா என்ன? வழக்கம் போல் நமது கற்பனையில்தான்!ஹி ஹி ஹி!)

கருத்துகள் இல்லை: